You are hereலாஜிக் உலகின் மேஜிக் நாயகன்

லாஜிக் உலகின் மேஜிக் நாயகன்


By panbudan - Posted on 15 October 2011

தேதி: : 
Saturday, October 15th, 2011

 

 

ஈடன் தோட்டத்தில் ஒரே குழப்பம். கடவுள் அறிவு மரத்தை நெருங்கக் கூடாது, அதன் கனியை உண்ணக் கூடாது என்று தடை போட்டுவிட்டதால், ஆதாமும் ஏவாளும் அதனருகே போவதே இல்லை. சாத்தானும் எவ்வளவோ ட்ரிக் செய்துப் பார்க்கிறார் யாரும் மசியக் காணோம். அவர்கள் அறிவுக் கனியை புசித்தால்தானே இந்த பிரபஞ்சத்தை அடுத்த பரிணாமத்திற்கு நகர்த்தி செல்ல முடியும்? ஒரே கவலையும் களேபரமுமாய் இருந்த நேரத்தில் யாரோ அழகான 'ஆப்பிள்' லோகோவை அறிவு மரத்தில் ஒட்டி வைக்க... 'ஆப்பிளின் புதிய ரிலீஸ்' என்று மக்கள்ஸ் இராப்பகலாக லைன் கட்டி நின்று அறிவுக் கனியை வாங்கி புசித்ததாக ஒரு தொன்ம வரலாறு உண்டாம்.

இம்மாதம் பத்தாம் தேதியிலிருந்து ஈடன் தோட்டத்து ஆப்பிள்களை பிரமோட் செய்ய ஸ்டீவ் ஜாப்ஸும் பிரமோஷன் வாங்கிக் கொண்டு போய்விட்டார். அவர்தன் ஆன்மா சாந்தியடைவதாக.

 

steve



ஆப்பிள் பொருட்கள் என்றாலே ஒருவிதக் மனக்கிளர்ச்சியுடன் எதிர்நோக்கும் பயனாளர்களை நாம் பார்க்கிறோம். இந்த உணர்வுமயமான ஒத்ததிர்வு வெகுசில ப்ராண்ட்களுக்கே சாத்தியமாகிறது. கணிணிகள் என்றாலே லாஜிக் நிரலிகள், அல்காரிதம் அலட்டல்கள் என்றிருந்த எழுபதுகளிலிருந்து பின்னாளில் அதை மேஜிக் உலகமாக மாற்றியதில் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு பெரும் பங்கு இருக்கிறது.

இணையத்தில் மேயும் வழக்கமுள்ள எவருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸை பற்றிய அறிமுகம் இல்லாமல் இருக்காது. இணைய சம்பந்தமில்லாதவர்களுக்கு இந்தக் கட்டுரையும் சென்று சேராது என்பதால், இன்ன இடத்தில் பிறந்தார், இன்னாருக்கு தத்து அளிக்கப் பட்டார், கல்லூரி படிப்பை முடிக்கவில்லை, எப்பொழுதோ எல்எஸ்டி எடுத்துக் கொண்டார் போன்ற ட்ரிவியாக்களை தவிர்த்துவிடுவோம். இணையத்தில் ஜாப்ஸ் பற்றி சப்ஜாடாக எல்லா தகவல்களும் இறைந்து கிடக்கிறது. தனது பதின்ம வயதுகளில் கொந்தளிப்பான மனநிலையில், தொடர்ந்து தேடலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அதன் விளைவாக ஹிப்பி கலாச்சாரத்தில் ஆர்வம், இந்தியாவிற்கு பயணம், பௌத்தம் தழுவல் என்று நிறைய நிகழ்வுகள். ஆனால், அவர் வாழ்க்கை வரலாற்றை ஊன்றிப் பார்த்தால், இவையெல்லாம் ஸ்டீவ்வின் தேடுதல் பயணத்தின் ஆரம்பக் தடுமாற்றங்களாகத்தான் தெரிகிறது .

இருபத்தியிரெண்டு வயதில், வெற்றிகரமாக ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியபோது, "எளிமையான கணிணி பயண்பாடு " என்ற புள்ளிக்கு அவர் வந்து சேர்கிறார். அதன் பிறகு, அதுவே தன் வழியென அடையாளம் கண்டு தன்னை அர்பணித்துக் கொள்கிறார் . அவர் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்

' Machintosh உருவாக்குவதற்கு முன்னரே அது எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எனக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது . அது எப்போதும் இங்கேதான் இருந்தது. நான் எப்போதும் பயனாளர்களுக்கு என்ன தேவை என்று கேட்பது இல்லை. ஒரு புரட்சிகரமான தயாரிப்புக்கு அவர்களால் பெரிதாக உதவி செய்ய முடியாது. அது நமக்குள்ளிருந்துதான் வரவேண்டும்' .

அவர் சொன்னது போலவே ஐபாட்களும், ஐஃபோன்களும், ஐபேட்களும் நாம் கேட்காமல்தானே நமக்குக் கிடைத்தன.

அந்த சிறிய வயதிலேயே தன்னை ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராக கார்பொரேட் உலகில் நிலைநிறுத்திக் கொள்கிறார் . ஸ்டீவ் வோஸ்னியாக்கின் ஆப்பிள்-II வடிவம்', 'பைட்' அங்காடி பால் டெர்ரலின் முதல் பர்சேஸ் ஆர்டர், மைக் மார்க்குல்லாவின் முதலீடு, விஸி-கால்க் ஸ்ப்ரெட்ஷீட் செயலிகள் என ஆசிர்வதிக்கப்பட்ட நிகழ்வுகளினால் ஆப்பிள் நிறுவனம், எழுபதுகளில் ஆர்த்து எழுந்த கணிணி அலையில் உச்சத்திற்குப் போய் விடுகிறது. அக்காலத்தில் ஆப்பிள்-II கணிணி ஹோம் கம்ப்யூட்டர் சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஃபோர்டு நிறுவனத்திற்கு பிறகு ஆப்பிள் நிறுவனம்தான் IPOவில் பொதுமக்களிடமிருந்து அதிக பணம் திரட்டி சாதனை படைக்கிறது. இருபத்தைந்து வயதில் ஸ்டீவ் நூறு மில்லியன் டாலர்களுக்கு அதிபதியாகிறார். ஆனால் ஸ்டீவ்வின் 'தேடுதல்' அங்கே நிற்கவில்லை.

ஜெராக்ஸின் PARC ஆய்வுக் கூட அனுபவங்கள் அவரை கணிணி உலகின் எதிர்காலம் கிராஃபிக்ஸ் இண்டர்ஃபேஸ்தான் என்ற தீர்மாணத்தை நோக்கி செலுத்துகிறது. அதுதான் Machintosh கணிணிகளுக்கான தொடக்க புள்ளி. லாஜிக் உலகில் இருந்த கணிணிகள் மேஜிக் உலகிற்கு மாறியது அதன் தொடர்ச்சிதான்.

ஆராய்ச்சி மேஜையில் உட்கார்ந்து புதிய கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தவில்லை. ஆனால் உணர்ச்சி பூர்வமான வடிவங்களை உருவாக்கும் நிறுவனத்தை கட்டியெழுப்பினார். அவர் அனிமேஷன் படங்கள் உருவாக்கியதில்லை. ஆனால் அனிமேஷன் அழகியலை மாற்றி அமைத்தார். நிலைபெற்றுவிட்ட சந்தைகளில் போட்டியிடுவதை விட, போட்டி சந்தைகள் உருவாக்குவதில் அக்கறை காட்டினார். வார்ட்டன் (Wharton) பள்ளிகள் சொல்லித்தராத தொழில்நுட்ப மேலாண்மையை அவர் எளிதில் புரிந்து வைத்திருந்தார். அவருடைய மேஜிக்குகள் என்று நாம் இப்பொழுது கொண்டாடும் சாதனைகளை, பல வருடங்களுக்கு முன்னரே அகவயமாக உணர்ந்து, அந்த சாதனைகளை ஈடேற்ற அயராது உழைத்தார்.

1985ல் ஆப்பிளில் நிகழ்ந்த நிர்வாகப் போட்டியினால் அவர் ஆப்பிளை விட்டு விலக வேண்டியிருந்தது. 'அதுவும் நல்லதிற்குதான்' என்று அவரே பின்னாளில் குறிப்பிட்டது போல, அவருடைய அடுத்தடுத்த முயற்சிகளான NeXT, Pixar போன்ற நிறுவனங்களும் கணிணி பயன்பாட்டினை மேம்படுத்திச் சென்றது. இன்றைய World-wide webன் முதல் அடி NeXT Softwareகளினால்தான் சாத்தியமானது. பிறகு ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளில் சேர்ந்து அதை மீள் உருவாக்கி கணிணியின் எல்லைகளைத் தாண்டி தன் வீச்சை விரித்துக் கொண்டது சரித்திரம்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளை விட்டு விலகும்போது அதற்கு ஒருவகையில் காரணமாயிருந்த அபாக்கியவான் ஜான் ஸ்கெல்லி அப்பொழுது ஜாப்ஸிற்கு எழுதிய கடிதம் இது....

"ஸ்டீவ், உனக்கு நான் மிகவும் கடமைபட்டிருக்கிறேன். இன்று இந்த பிரபஞ்சம் சிறிதேனும் மேம்பட்டிருக்கிறது என்றால், அது உன் அக்கறையினால்தான். மிகவும் ரசனையோடும், நேர்த்தியோடும், மயங்க வைக்கும் அனுபவத்தோடும், சமரசமில்லாத தரமான பொருட்களினாலும் அதை மேம்படுத்தியிருக்கிறாய். உன் சாதனை எங்களை எல்லாம் புன்னகைக்க வைத்திருக்கிறது"

சத்தியம். இதையே நாம் எல்லாரும் இன்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். We all miss you Steve!

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <p> <span> <img> <div> <pp_img> <pp_media> <h2> <h3> <h4> <h5> <h6> <br> <blockquote> <table> <tbody> <tr> <th> <td>
  • Insert images and media with <pp_img> or <pp_media>. See formatting options for syntax.

More information about formatting options

CAPTCHA
சிரமத்திற்கு மன்னியுங்கள் நண்பர்களே! சில வாரங்களாக ஸ்பேம் பின்னூட்டங்கள் அதிகரிப்பதால் இந்த சோதனையை சேர்த்துள்ளோம்.
Image CAPTCHA
Enter the characters shown in the image.